திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.58 திருவலம்புரம் - திருத்தாண்டகம் |
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக்
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
1 |
சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
2 |
தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல
அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
3 |
மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
4 |
அனலொருகை யதுவேந்தி அதளி னோடே
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப்
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சோர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
5 |
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வெளவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
6 |
பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வூரிர் எம்பெருமா னென்றேன் ஆவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
7 |
பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்
மல்லார் வயல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
8 |
பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா
என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
9 |
செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி
அடர்த்டதவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |